கோவை மாவட்டம் ஆலாந்துறை மோளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (24). இவரது மாமா தர்மன். இருவருக்கும் அடிக்கடி கோயில் விவகாரம் ஒன்றில் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (செப். 16) ரவி உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழியில் தர்மனைப் பார்த்துள்ளார்.
பின்னர், இருவரும் மது அருந்த காட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது கோயில் விவகாரம் குறித்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த ரவி கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை கொண்டு தர்மனை தாக்கிவிட்டு தப்பினார். இதில் தர்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த ஆலாந்துறை காவல் துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்துவிட்டு தப்பி ஓடிய ரவியை தேடிவந்தனர்.
இந்நிலையில் மேலப்பாளையம் வீட்டின் அருகே பதுங்கியிருந்த ரவியை காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கொலை வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் மாமனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.