கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ரங்நாதபுரத்தில் அம்மா அப்பா என்ற பெயரில் இறைச்சிக் கடை ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் கடையின் உரிமையாளர் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் குடமும், அரை கிலோ வாங்கினால் தேங்காய் ஒன்றும் ஆடி ஆஃபரில் ஒரு மாத காலத்துக்கு இலவசமாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தார்.
இதன் காரணமாக சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆட்டுக்கறி வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் இக்கடைக்கு படையெடுக்கிறது. சந்தையில் ஆட்டுக்கறி கிலோ 800 முதல் 850 ரூபாய்வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இங்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி 560 ரூபாய்க்கும், தலைக்கறி 180 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ராஜசேகர் கூறுகையில், ”பொதுமக்களை கவரும் விதமாக இலவச அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் இதனை பார்த்துவிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வந்து கறி வாங்கி செல்கின்றனர். கறியும் நல்ல தரத்தில் விற்கப்படுகிறது” என்றார்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர், ”மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமே இதுபோன்று இறைச்சி விற்பனை செய்ய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது கோவையில் இதுபோன்று விற்பனை நடைபெறுவது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.