கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கிவருகிறது. இங்கு மது அருந்துவதற்காக முத்துசாமி(48) என்பவர் வந்துள்ளார். அப்போது, செல்ஃபோன் ஒன்று கீழே கிடந்ததை கவனித்த அவர், அதை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துள்ளார்.
அப்போது, டாஸ்மிக்கில் இருந்த செந்தில் தனது நண்பர்களான வேல்முருகன், சதீஷ், கண்ணன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். பின்னர், தனது செல்ஃபோன் காணாமல் போனதை உணர்ந்தபின், தனது நண்பரின் செல்ஃபோனிலிருந்து அவருடைய எண்ணிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அங்கு, மது அருந்திக்கொண்டிருந்த முத்துச்சாமியின் பாக்கெட்டில் தனது செல்ஃபோன் சத்தம் கேட்டதை அறிந்த செந்தில், அவர் அருகே சென்று செல்ஃபோனை திருடியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு நான் திருடவில்லை செல்ஃபோன் கீழே கிடந்தது என்பதைக் கூறிய முத்துச்சாமியின் பேச்சை கேட்காத செந்திலின் நண்பர்கள் அவரை அடித்து, உதைத்துள்ளனர்.
இதில், முத்துச்சாமி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். எந்தவொரு அசைவுமின்றி கீழேகிடந்த முத்துச்சாமியை எழுப்ப முயன்ற செந்திலும் அவரது நண்பர்களும் அவர் உயிரிழந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து, தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷ், வேல்முருகன் ஆகிய இருவரைக் கைதுசெய்தனர்.
மேலும், தலைமறைவாகியுள்ள செந்தில், கண்ணன் ஆகியோரைக் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கீழே கிடந்த செல்ஃபோனை எடுத்ததால் முத்துச்சாமிக்கு நேர்ந்த இச்சம்வம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நிலத்தகராறில் விவசாயி உயிருடன் எரித்துக் கொலை' - கொலையாளிகள் கைது!