கோயம்புத்தூர்: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை அழகு படுத்தும் விதமாக, கோவை மாநகராட்சி 'ஸ்ட்ரீட் ஆர்ட்' என்ற அமைப்புடன் இணைந்து கட்டடங்களில் அழகிய ஓவியங்கள் வரைந்து வருகிறது. கோவையில் இந்த அமைப்பின் சார்பில், வரையப்பட்ட ஓவியங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளுக்கான, ஓவியப்பயிற்சி மற்றும் போட்டி நடைபெற்றது. இதில் சிறந்த ஓவியம் வரைந்தவர்களுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர் கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஓவியங்கள் வரையப்படும். விரைவில் அதற்கான அறிக்கை வெளியிடப்படும். அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது தங்களது ஆட்சி போய்விட்டது என்ற விரக்தியில் செய்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்