கோயம்புத்தூர் அடுத்த கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த ரூபேஷ், சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 போ் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதில் வீரமணி(70) கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைதானவர்கள் மீது தமிழ்நாடு, கேரளா மற்றும் கா்நாடகாவில் 8 வழக்குகள் உள்ளன. போலி ஆவணம் தயாரித்து சிம்காா்டு வாங்கியதாக ஈரோடு மாவட்ட காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிணை கேட்டு வீரமணி மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையில், வீரமணிக்கு கடந்த வியாழக்கிழமை பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அனைத்து வழக்குகளிலும் அவருக்கு பிணை கிடைத்ததை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கோவை மத்திய சிறையிலிருந்த அவர், நிபந்தனை பிணையில் நேற்று (ஆகஸ்ட் 24) விடுவிக்கப்பட்டார்.