மதுரை, திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள சிலர் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து பாஸ்போர்ட் வாங்கியதாக அவர்களை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ளவர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவை கணபதி புதூரை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இவர், காந்திபுரம் 6வது வீதியில் விஷால் இன்பெக்ஸ் என்ற பெயரில் டூரிஸ்ட் அலுவலகம் நடத்தி வருவதும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவருடன் சேர்ந்து, போலி ஆதார் கார்டு, போலி வங்கி கணக்கு மூலம் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து ரகுபதியின் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆனந்த்குமார் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!