கத்திரி வெயில் காரணமாக கோவையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கரோனாவால் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மக்களை, கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று திடீரென்று இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
குறிப்பாக கருமத்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. மின்சார ஊழியர்கள் குறைவாக உள்ள காரணத்தினால் சீரமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், பொள்ளாச்சியில் பெய்த கனமழையில் பேக்கரி இடிந்த விழுந்து விபத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பொருள்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, அன்னூர், துடியலூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளைச் சூழந்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
இதையும் படிங்க: பெண் சிசுக் கொலைகளை தடுக்க இனி என்ன செய்ய வேண்டும்?