கோவையில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால், அவ்வாறு வரக்கூடிய பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்படுகின்றனர்.
கோவை நகரில் சின்னியம்பாளையம் ஆர். ஜி. புதூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறையினரும் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக வரக்கூடிய பயணிகளால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சென்னையில் இருந்து அனுமதி இல்லாமல் சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள் இன்று காலை முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதனைதொடர்ந்து, கோவை மாநகராட்சியின் எல்லையான சின்னியம்பாளையம் பகுதியில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு கோவை நகருக்குள் வரக்கூடிய வாகனங்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு அதில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் இ-பாஸ் இல்லாமல் வரக்கூடிய வாகனங்கள் இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் ஸ்மித்சரண், துணை ஆணையர் பாலாஜி சரவணன் ஆகியோர் சின்னியம்பாளையம் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர். முறையாக அனுமதி பெறாமல் வரக்கூடிய வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கக்கூடாது, இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்
இதையும் படிங்க: நகைக்கடை உரிமையாளர் வடிவமைத்த கரோனா காதணி!