கோயம்புத்தூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இன்று (மார்ச் 3) கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பெற்ற முடிவு என்பது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவாகத்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
அதிகப்படியான வாக்கு வித்தியாசம்தான் அதற்கு எடுத்துக்காட்டு. மேலும் ஜனநாயகத்தோடு போட்டியிட்டு, பணநாயகம் வென்றுவிட்டதாக வாக்காளர்கள் கருதுகிறார்கள். மக்களிடம் பொதுவாக மனமாற்றம் தேவைப்படுகிறது. ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை அவர்களுடைய ஆட்பலம், பணபலம் மற்றும் அதிகாரத்தை வைத்து ஏழை, எளிய நடுத்தர மக்களை குறிவைத்து, அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி பட்டியில் பூட்டி வைத்து, வாக்குகளை பெறுவது என்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே நடைபெறாத வண்ணம் இந்த இடைத்தேர்தலில் நடந்திருக்கிறது.
இந்த ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்காக நடைபெற்ற அனைத்தும், 233 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறவில்லை என்பதை அந்த தொகுதி மக்கள் அறிவார்கள். ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிமான வெற்றியாக கருதுகிறேன். இந்த வெற்றி செயற்கையான வெற்றி. இனிவரும் காலங்களில் ஜனநாயகத்திற்கான தேர்தலாக தேர்தல்கள் அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணாடிபோல் செயல்பட்டிருக்க வேண்டும். தற்போது உள்ள ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தைத் தாண்டி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய கருத்து. இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி அதிமுக 43,000 வாக்குகளைப் பெற்றிருக்கிறதென்றால், உண்மையிலலேயே அதிமுக மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது.
இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் 25 சதவீத வாக்குகள் அதிமுக பெற்றிருக்கிறது என்றால், இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால், அதிமுக பிரகாசமான வெற்றி பெறுவதற்கான சூழல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற தேர்தல்களை நடத்தக்கூடாது. அது வாக்காளர்களின் விருப்பம் கிடையாது. தேர்தல் ஆணையம் முறையாக, சரியாக கண்காணிக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டு, இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. வடகிழக்கில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க தவறிவிட்டது.
மேலும் எதிர் வரும் காலங்களில் பாஜக கூட்டணி சார்ந்த வேட்பாளர்கள், இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வருவதற்கான வாய்ப்பாக இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெறுவோம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது’ - எடப்பாடி பழனிசாமி