கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் முகாமில், விநாயகர் சதுர்த்தியையொட்டி வளர்ப்பு யானைகளுக்கு விஷேச உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விநாயகரை வளர்ப்பு யானைகள் வழிபட்டன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோழிகமுத்தியில் உள்ள இந்த முகாமில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் விழா நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா ஆகியோரது உத்தரவின் பேரில், இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா கோழிகமுத்தி முகாமில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வனச்சரகர் தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: 12 அடி நீள ராஜநாகம்... பயணிகள் பீதி... பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
விழாவை முன்னிட்டு முகாமில் உள்ள 27 வளர்ப்பு யானைகளை, பாகன்கள் ஆற்றில் குளிக்க வைத்தனர். பின்னர் யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பூ மாலைகள் அணிவித்து முகாமில் உள்ள விநாயகர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, விநாயகருக்கும், வளர்ப்பு யானைகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், யானைகள் தும்பிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கி வழிபட்டன. பின்னர், யானைகள் உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, சாதம், ராகி, தேங்காய், கரும்பு, வெள்ளம், வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, மாதுளை, உப்பு, சத்துமாவு, மாத்திரைகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்பு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், வனஉதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பாகன்கள் மற்றும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பனைமரத்தில் இருக்கும் கொடிய விஷவண்டுகளை அழிக்க பொதுமக்கள் கோரிக்கை!