கோயம்புத்தூர்: யானையின் சாணத்தில் என்ன இருக்கும்? அது அன்றாடம் சாப்பிடும் உணவான பழங்களின் கழிவுகள், மரங்களின் குச்சிகள், விதைகள் என ஒரு மாபெரும் காட்டை உருவாக்கத்தேவையான உட்பொருட்கள் இருக்கும். ஆனால், கிண்டக்கிண்ட நாப்கின் முதல் சாம்பார் கவர் வரையிலும் பிளாஸ்டிக் குவியலாக இருப்பதை விளக்குகிறார் வன உயிரின ஆர்வலரான முருகானந்தம். மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானையின் சாணத்தில் தான் இத்தனை அபாயகரமான பொருட்கள் கிடக்கின்றன.
இது கடந்த ஆண்டு ( 10.01.2022) எடுக்கப்பட்ட வீடியோதான் என்றாலும், இதன் வீரியம் இன்னமும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் உள்ளன தற்போதும் நாம் காணும் காட்சிகள். கோவை வடவள்ளியை அடுத்த சொமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் வனப்பகுதியை குப்பைக்கிடங்காக மாற்றி வைத்துள்ளது.
யானைகள், மான்கள் வாழும் அழகிய இந்த வனப்பகுதி இந்த குப்பைக்கிடங்கால் தனது பொலிவை படிப்படியாக இழந்து வருகிறது. பச்சை பசும்புற்களை சாப்பிட்டு பழகிய வனவிலங்குகள், குப்பையில் கிடக்கும் கழிவு உணவுப் பொருட்களை சாப்பிடும் போது, அவற்றில் உள்ள செயற்கை உப்பு உள்ளிட்ட சுவைகளுக்கு பழகி விடுகின்றன. இதனால் குப்பைத் தொட்டியில் உணவு தேடுவதை பழக்கமாக்கி விடுகின்றன இந்த வனவிலங்குகள்.
தூய்மையான வனச்சூழலில் வாழத் தகுதி வாய்ந்த இந்த பேருயிர்கள் குப்பையில் உணவு தேடும் காட்சிகளை பிரத்யேகமாக பதிவு செய்துள்ளது ஈடிவிபாரத். கடந்த ஆண்டு அந்தப் பகுதியில் யானைகளின் சாணத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குப்பைக் கிடங்கை அகற்றுமாறு வனத்துறையினர் சொமையம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். எனினும், வனத்துறையின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அங்கேயே குப்பைகளை கொட்டி வருகிறது. மேலும், அதிகளவு குப்பைகள் சேரும்போது அதற்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
இது குறித்து ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில், “மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மருதமலை வனப்பகுதி யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு அளிக்கிறது. இந்த பகுதிகளில் மான் சிறுத்தை காட்டுமாடு யானைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளதால் இங்கு அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம்.
இங்கு வரும் யானைகளின் சாணங்களில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளது, குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என வனத்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும் அவர்கள் அகற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். தற்போது மான் மற்றும் யானைகள் குப்பை கிடங்கில் உணவு சாப்பிடும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அமைக்கப்படும் குப்பை கிடங்குகளையும் அகற்ற வேண்டும் குப்பை மேலாண்மையை சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்ட கூடாது, ஆனால் இந்த நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை. விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை கிடங்குகள் சரியான இடத்தில் அமைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜை அணுகி ஈடிவி பாரத் விளக்கம் கேட்டது. அவர் பதிலளிக்கையில், வனப்பகுதியை ஒட்டி குப்பை கிடங்குகள் அமைக்க கூடாது என நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் தற்போது மருதமலை அடிவாரத்தில் வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் என்பதால் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம் ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை, குப்பைகளை நாளுக்கு நாள் அதிகமாக கொட்டி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அங்கு குப்பைகளை எரிப்பதால் வன விலங்குகளுக்கும்,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பை கிடங்குகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு வனத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது அதில் வனப்பகுதியை ஒட்டி திறந்தவெளியில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகள் அந்த கழிவுகளை சாப்பிடுவதால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் வனப்பகுதியை ஒட்டி குப்பை கிடங்கை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தால் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சொமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் விளக்கத்தையும் பெற ஈடிவி பாரத் முயற்சித்து வருகிறது.