கோயம்புத்தூர் சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர், பெயின்டிங் வேலை செய்துவருகின்றார். இவர் சௌரிபாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு நேற்று (ஜூன் 11) சென்றார். அந்த வீட்டில் பாம்பு புகுந்தது. போதைத் தலைக்கேறிய இளைஞர் சௌந்தரராஜன் பாம்பை அடிக்க முயன்றார்.
அப்போது பாம்பு சௌந்தரராஜனின் கையில் கடித்தது. இதையடுத்து, தன்னைக் கடித்த பாம்பை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். பாம்பை உயிருடன் பிடித்து வந்ததைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த வாயிற்காவலர்களிடம் சிவப்பு நிற பையிலிருந்த அப்பாம்பு கொடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பாம்பு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. தற்போது, சௌந்தரராஜன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இரவலர்களின் நம்பிக்கை நாயகர்கள் இவர்கள்' - தேடிச்சென்று உணவளிக்கும் தன்னார்வலர்கள்