சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பெரியார் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கோவை மாநகர காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, "1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ‘ராமர் - சீதை’ ஆகியோரின் படங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்