கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மறந்தனர். இதனையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் அதனை சுட்டிக் காட்டிய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
கூட்டம் துவங்கியவுடன் மாநகர பகுதிகளில் பணிகள் மந்த கதியில் நடப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அப்போது அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கும் , திமுக மேயர் கல்பனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மிச்சர் சாப்பிடுவதற்காக மாநகர மன்றத்திற்கு வருகிறோமா என காட்டமாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா என மேயர் கல்பனா பதிலுக்கு பேசினார். இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலரும், மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு, தங்களது மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாக குற்றம் சாட்டினார்.
அப்போது திமுக மேயர் கல்பனாவிற்கும் திமுக மண்டல தலைவர் மீனா லோகுவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யப் போவதாகவும், அதிமுக ஆட்சியில் கூட மரியாதையாக நடத்தினார்கள். இப்போது மோசமாக நடத்துகின்றனர் எனவும், தனிபட்ட வன்மத்துடன் மேயர் கல்பனா செயல்படுவதாகவும் கூறிய மண்டல தலைவர் மீனா லோகு, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றார்.
வெளியேற முயன்ற திமுக கவுன்சிலர் மீனா லோகுவை சக திமுக கவுன்சிலர்கள் அமைதிப்படுத்தி உட்கார வைத்ததுடன், மண்டல தலைவரின் கோரிக்கைகளை மேயர் கல்பனா செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். திமுக மண்டல தலைவரே திமுக மேயரை எதிர்த்து வெளிநடப்பு செய்ய முயன்றதால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் துவங்குவதற்கு முன் இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் ”அதிமுக ஆட்சி காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் துவக்கப்பட்ட இலவச மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்களுக்கு தற்போது உள்ள திமுக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஏற்கனவே பல்வேறு விஷயங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும் இளைஞர்களை ஊக்குவிக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் திமுகவினர் இவ்வாறு செய்யலாமா” என கேள்வி எழுப்பினர். மேலும் இதற்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் அதிமுக கவுன்சிலர்கள் கூறினர்.
அண்மையில் கோவையில் பரபரப்பை உண்டாக்கிய மேயரின் குடும்பத்தினர் செய்த செயல் குறித்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள், அச்செயல் மிகவும் அருவருக்கத்தக்கது எனவும், வெட்கக்கேடான செயல் எனவும் இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் எனவும் தெரிவித்தனர்.
மேலும் மேயருக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோடிக்கணக்கில் செலவு செய்து அரசு குடியிருப்பு ஒதுக்கி இருக்கும் போது ஏன் மேயர் கல்பனா அங்கு குடியிருக்கின்றார் என்று தெரியவில்லை. மக்கள் வரிப் பணம் என்றால் எப்படி வேணாலும் வீணாக்கலாமா?” என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: "மக்களை கொன்றவர்களுக்கு வரவேற்பு கொடுக்க அண்ணா கனவில் வந்து சொன்னாரா" - ஜார்கண்ட் ஆளுநர்!