கோயம்புத்தூர்: திமுக ஆதிதிராவிடர் மாநில இணைச் செயலாளராக இருப்பவர், திப்பம்பட்டி ஆறுச்சாமி. இவர் மாவட்ட வேளாண்மை உற்பத்திக் குழுவில் உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வேளாண் உற்பத்தி குழுவில் இவர் பெயர் இடம் பெறவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கேட்டபொழுது, பழைய நிர்வாகிகளுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்ததாகவும், ஆனால் அதில் பரமசிவம் என்பவருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது இவரும், இவரது ஆதரவாளர்களும் இச்செயலுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்தான் காரணம் எனக் கூறி, கண்டனம் தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழக்கங்களை எழுப்பக் கூடாது என்றனர்.
இது குறித்து ஆறுச்சாமி கூறுகையில், “நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவன். தற்போது வேளாண்மை உற்பத்திக் குழுவில் புதியதாக பொறுப்பு போடப்பட்டுள்ளது என்பது சாதி ரீதியான தாக்குதல். நான் 1977-இல் இருந்து திமுகவில் உறுப்பினராக இருந்து, தற்போது ஆதிதிராவிடர் மாநில இணைச் செயலாளராக இருக்கிறேன்.
நான் ஒரு பேச்சாளர். முதலமைச்சரின் மக்கள் திட்டங்களை கிராம் கிராமமாக சென்று எடுத்துரைத்து வரும் எனது குரலை குறைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் எனக்கு அளித்து வரும் அங்கீகாரத்தை, அதிகாரிகள் சாதி ரீதியாகப் பிடிக்காமல், திட்டமிட்டு என்னை வெளியேற்றி உள்ளனர். இங்குள்ள அதிகாரிகள் சாதி ரீதியாக செயல்படுகிறார்கள் என்பதுதான் வேதனை அளிக்கிறது” என்றார்.
வேளாண் உற்பத்திக் குழு மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னையை தாம் எடுத்து கூறும்போது, அப்போதைய மாவட்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கூறுவார் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கின்ற போதும் அதிகாரிகள் செய்கின்ற தவறுகளை நாங்கள் சுட்டிகாட்டுவோம்.
தற்போது உரம் கையிருப்பு இல்லை என அதிகாரிகள் சாதித்த நிலையில், உரம் கையிருப்பு உள்ளதை கண்டுபிடித்து நாங்கள் கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக, வேளாண் PA மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரும் தன்னை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!