கோயம்புத்தூர்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது இன்று (நவ.12) மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து கோயில்களுக்குச் சென்றும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையிலும் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும் தீபாவளியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொடுத்தும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து, உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் புதுமண தம்பதிகளும் அவர்களது தல தீபாவளியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கோவையில் உள்ள பொழுதுபோக்கு இடங்கள், பலகாரக் கடைகள், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்படுகிறது. குறிப்பாக, இறைச்சி கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. அதேநேரம், தீப்பிடிப்பு சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், உடனடியாக அதனை கட்டுப்படுத்துவதற்கும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனையிலும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக்குழு தயாராக உள்ளது. மேலும், அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தல தீபாவளியைக் கொண்டாடி வரும் புதுமண தம்பதிகள், தங்களது புது உறவுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டங்களை மழை தடுக்காது..! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!