கோயம்புத்தூர்: பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருப்பூரைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அவரது தாயாரிடம் ஆசி பெற்று இனிப்பு ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும், பிரதமரும் தேர்ந்தெடுத்துள்ளனர். இது அவர்கள் தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், நமது கலாச்சாரம் மற்றும் மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.
பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திறக்கும் என்னென்ன வழியில் செயல்பட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன். இது எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை, தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.
பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘பேராசிரியரை முதலில் மேடையேற்றியது அண்ணாதான்’ - வைகோ பேச்சு