கோயம்புத்தூர் மாவட்டம், சிந்தாமணி பகுதியில் திருநங்கைகள் 10 பேர் இணைந்து உணவகம் ஒன்றை திறந்துள்ளனர். கோவை டிரான்ஸ் கிச்சன் என பெயரிடப்பட்ட இந்த உணவகத்தை தொடங்க UWC, சிஎஸ்ஐ அப்பாசாமி கல்லூரி உள்பட பல அமைபினர் உதவியுள்ளனர்.
இந்த உணவகம் நன்றாக இயங்கினால் 6 மாத காலத்தில் கோவையில் மற்றொரு கிளையும் திறக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அப்பாசாமி கல்லூரியில் எவ்வாறு ஹோட்டல் நடத்த வேண்டும்? என இந்த 10 பேரும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் கீதாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கையினர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் உணவகம் ஒன்றினை கோவையில் தொடக்கியுள்ளோம். இதன் மூலமாக எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். வழக்கமாக ஹோட்டல்களை போன்றே இங்கும் செயல்படும் ஆர்டர்களும் எடுத்து கொள்ளப்படும்” என்றார்.
திருநங்கைகளை யாசகம் பெறுபவர்களாக மட்டுமே பார்க்காமல் வாய்ப்பு வழங்கினால் அவர்களும் ஊழியர்களாக, உரிமையாளர்களாக மாறமுடியும் என்பதற்கு நிச்சயம் கோவை டிரான்ஸ் கிச்சன் முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!