கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோயில்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கினால், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு முன் பதிவுசெய்த திருமண நிகழ்ச்சிகள் மட்டும் ஊரடங்கு விதிகளுக்குள்பட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக, எளிமையான முறையில் ஆங்காங்கே சில திருமணங்கள் நடைபெற்றன. இந்தச் சூழ்நிலையில், கோவையைச் சேர்ந்த விக்னேஷ் பாபு-ப்ரீத்தி ஆகிய இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிக எளிய முறையில் துடியலூர் அடுத்த குருடம்பாளையத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள், திருமணத்தில் சமையல் ஆர்டரை ரத்துசெய்யாமல் உணவு சமைத்து, ஏழை மக்களுக்கு வழங்க முடிவுசெய்தனர். அதன்படி, உணவு சமைக்கப்பட்டு, அந்த உணவு பார்சல்களைப் பணியிலிருந்த காவல் துறையினர், சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊடகத்துறையினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி