கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற விளம்பரப் பலகையின் மீதான நடவடிக்கை மற்றும் விதிகளின்படி, அனுமதி வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், எவ்வாறு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்? என்னென்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும்? எவ்வாறு விதிகளுக்குட்பட்டு விளம்பரங்கள் அமைக்கப்பட வேண்டும்? அனுமதியற்ற விளம்பர நிறுவனங்கள் மீதான புதிய சட்டத்தின் கீழ் தண்டனை என்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ரயில்வே இடமாக இருந்தாலும், சாலை அருகே வைக்கப்படும் விளம்பரப் பலகைகளுக்கும் புதிய விதி பொருந்தும் எனவும், ரயில்வே இடத்தில் பெரும்பாலான விளம்பரங்கள் விதிகளுக்கு புறம்பாகவே உள்ளது என அதிகாரிகள் இக்கூட்டத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும், மற்ற பகுதியிலுள்ள விதி மீறிய நிறுவனங்களுக்கும், கட்டட உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் கட் அவுட்டுகளை அகற்றக்கோரி மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அதிமுக ஆட்சிக் காலத்தில் பல வழக்குகள் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பள்ளிக்கரணை அதிமுக பிரமுகர் இல்லத்திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் பலியானது. விழுப்புரத்தில் திமுக நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சிக்காக அமைச்சரை வரவேற்று கொடிக்கம்பம் நாட்டிய போது 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உள்ளிட்டது தொடர்பாக தற்போது வரை பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கான உதவி எண்களை அறிவித்து சென்னை மாநகர காவல்..!