கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவர் கரோனா தொற்று காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 20 நாள்கள் சிகிச்சைக்கு கட்டணமாக ரூ.20 லட்சம் மருத்துவமனை நிர்வாகம் விதித்துள்ளது.
இதில், ரூ.16 லட்சத்தை குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காதர் உயிரிழந்தார். மீதமுள்ள ரூ.4 லட்சத்தை செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவைக்கான கரோனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அலுவலர் சித்திக், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க அவர் உத்தரவிட்டார்.
இதேபோல, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஷாஜகான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறிகளுடன், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த ஷாஜகான் மே 20ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளது.
பின்னர், காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது ரூ.15 லட்சம் மருத்துவனை தரப்பில் கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது அதில், கட்டணம் ரூ.11.55 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் புகார் தெரிவித்துள்ளார்.
இதேபோல, கோவை சுந்தராபுரம், துடியலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அடிப்படையில் 4 தனியார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த வட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.