கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முருகையன்(65). இவருக்குக் கடந்த மே 12ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மத்தம் பாளையம் பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (மே.13) இரவு அறையின் வெளியில் வந்து சிகிச்சை மைய வளாகத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அதனையடுத்து, சுமார் 12:30 மணியளவில் இவரது உடலைப் பார்த்த பணியாளர்கள், மருத்துவர்களுக்கும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், மருத்துவர்களின் உதவியுடன் உடலை மீட்டு இறுதிச் சடங்கிற்கான பணியினை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணையில் முருகையனுக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று எனவும், சிகிச்சை மையத்திற்கு வந்ததிலிருந்தே மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் தெரியவந்தது. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட 2 நாளில் நோயாளி தற்கொலை செய்து கொண்டது அங்கு இருக்கும் பிற நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொற்று உறுதியாகி அதிலிருந்து மீண்டு வருபவர்கள் அதிகமானோர் இருக்கையில், இது போன்ற முடிவுகள் எடுப்பது தவறானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை