கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி வால்பாறை பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அதே வார்டில் இருந்த காளியப்பன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவரும் பிரசவத்துக்காக சேர்ப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கரோனா இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, கரோனா சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டு ரேவதி தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், பிரசவத்துக்கு பின் மணிமேகலை அவருடைய சொந்த ஊரான வால்பாறை சவராங்காடு எஸ்டேட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள பொதுமக்கள் அவருக்கும் கரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக எண்ணி அப்பகுதியை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.
அதன்பின்னர் வால்பாறை காந்திநகரில் உறவுக்காரர் வீட்டில் மணிமேகலை தங்கியுள்ளார். இதையறிந்த மருத்துவர்கள், காவல் துறையினர் அவரை கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிமேகலைக்கு கரோனா இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து கரோனா சிறப்பு அறையில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும், இதற்கு காரணமான ரேவதிக்கு எவ்வாறு கரோனா பரவியது என்பது குறித்தும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 பேர் - கரோனா இல்லாததால் விடுவிப்பு