நொய்யல் ஆற்று தடுப்பணை பகுதியொட்டிய நீர் பகுதியான இங்கு சாயப்பட்டறைகளின் ரசாயனக் கழிவுகள் கலந்து நீர் சோப்பு நுரைபோல் காட்சியளிப்பது தொடர்கதையாகிவிட்டது. இந்நிலையில் நேற்றும் சாயப்பட்டறைகளின் ரசாயனக் கழிவுகள் கலந்து நீரில் மாசு நடந்திருக்குமென தெரிகிறது.
இன்று அந்த தடுப்பு பகுதியில் கட்லா, ஜிலேபி போன்று ஆயிரக்கணக்கான ஆற்று மீன்கள் இறந்த நிலையில் மிதந்துள்ளன. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளை கலக்கக்கூடாது என்றும், கழிவுகளை சுத்திகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கோ, அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கோ அஞ்சாமல் மீண்டும் மீண்டும் சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நொய்யலாற்றில் திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கப்படுவதனால் மூன்று மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும், இதனால் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நஞ்சுண்டாபுர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் நிற்கும் நொய்யலை மீட்டெடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.
இதையும் படிங்க : மழையால் செழித்த பயிர்கள், நோயால் மடிந்து போகுது - பெருங்குடிகள் வேதனை!