கோவை அன்னூர் பகுதியில் விவசாய பொருட்களை வாங்கி விற்கும் ஜெயபாரதி ஆக்ரோ புட்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்துள்ளது. விவசாய பொருட்களை வாங்கி கொண்டு அதை தாங்களே விற்று குறிப்பிட்ட பணத்தை அளிப்பதாக கூறிய நிலையில், அதை நம்பி அங்கு பலரும் விவசாய பொருட்களான கம்பு, சோளம், திணை போன்றவற்றை கொடுத்து வந்துள்ளனர்.
நாளடைவில் பொருட்களுக்கு 20 விழுக்காடு பணம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதி பணத்திற்கு காசோலையை அந்நிறுவனத்தினர் அளித்துள்ளனர். ஆனால் அந்த காசோலை வங்கியிலிருந்து திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், பணம் தருவதாகக் கூறி ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுமார் 40 லட்சத்திற்கும் மேல் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் தராமல் இழுத்தடித்து வந்த அந்நிறுவனத்தையும் மூடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொருட்களை கொடுத்தவர்கள் அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நிறுவனத்தின் மீதும் நிறுவன உரிமையாளர் சுந்தரராசு மீதுm சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "ஜெயபாரதி ஆக்ரோ புட்ஸ் நிறுவனத்தினர் விவசாயப் பொருட்களை கொடுத்தால் அதனை அதிக விலைக்கு விற்று தங்களுக்கு பணம் அளிப்பதாகத் தெரிவித்தனர். இதனால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் அங்கு பொருட்களை அளித்தோம். அதற்காக அவர்கள் அளித்த காசோலை வங்கியிலிருந்து திரும்ப அனுப்பப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை. பொருட்களை கொடுத்த பலரும் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த நிறுவனத்தினரின் நடவடிக்கையால் இரண்டு பேர் தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளனர்.
எனவே விவசாயப் பொருட்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அந்த நிறுவனத்தின் மீதும், நிறுவன உரிமையாளர் சுந்தரராசு மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அந்த நிறுவனம் வெவ்வேறு பெயர்களில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.