கோயம்புத்தூர்: கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலைய எல்லைகளில் பொதுமக்கள் தவறவிட்ட 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாய்ஸ் மற்றும் கேர்ல்ஸ் கிளப்புகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும் புகையிலையில்லா மாவட்டம் என்ற இலக்கில் அனைத்துத்துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம். இதுவரை மாநகர பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு கடையின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது" என்றார்.
அதனைத் தொடர்ந்து ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை குறித்து பேசிய ஆணையர், "கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த நவ.27ஆம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டார். அந்த கொள்ளை சம்பவத்தில், சுமார் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியால் குற்றவாளியை கண்டுபிடிகப்பட்டார்.
ஆனால் குற்றவாளியை பிடிக்க முயன்ற போது அவர் வீட்டின் கூரையை பிரித்து தப்பிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 3 கிலோ தங்கம் உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யபட்டன. மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பி ஓடிய குற்றவாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது நகைக்கடை வழக்கில் தேடப்படும் விஜய்யின் மாமியர் யோகராணியை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.