கோயம்புத்தூர்: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. இந்த சூழலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மீட்புப் படையினர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னையில் மிக்ஜாம் புயல் சீரமைப்புப் பணிகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புக்குழு, தன்னார்வலர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் இணைந்து மக்களை மீட்டு வருகின்றனர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கோவை மாநகர காவல்துறை அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள், பண், பிரட், பிஸ்கட், ஸ்வட்டர், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஆடைகள், சோப், டூத் பேஸ்ட் மற்றும் நாப்கின் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் லாரி மூலமாகச் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள உடைகள், ரூபாய் 3 லட்சத்துக்கு மேல் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் என மொத்தமாக ரூபாய் 5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களைத் தயார் செய்து இன்று (டிச.07) சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட லாரியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கிய இந்திய விமானப்படை!