கோவை வைசியாள் வீதி கெம்பட்டடி காலனியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய மனைவி தனலட்சுமி (62). இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மணிகண்டன் தவிர பிற அனைவருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்துவந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று (செப். 30) வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். இதனையடுத்து இரவு தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிகண்டன், தாய் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கத்தி பாய்ந்த நிலையில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தனலட்சுமி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து பெரியகடைவீதி காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
மேலும் தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கழுத்தில் உள்ள கத்தியின்பிடி, கதவு, பீரோவின் கதவு போன்ற இடங்களில் பதிந்திருந்த கைரேகைகள் பதிவுசெய்யப்பட்டன.
அதுமட்டுமின்றி தனலட்சுமிக்கு ஏராளமான சொத்துகள் உள்ளதால், சொத்துக்காக கொலைசெய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!