கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வெங்கடேஷ். இவர் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தனது இரு மகள்களான காயத்ரி (9), கீர்த்தனா (7) ஆகியோரை பள்ளியில் விடுவதற்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ரத்தினபுரி புதுப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவிகள் இரண்டுபேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த வெங்கடேசனை சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து துணை ஆணையர் உமா, விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த குப்பைத்தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயிரிழந்த பள்ளி மாணவிகளின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
லாரியை ஓட்டிவந்த கணேசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருமகள்கள் விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்து: இளம்பெண்ணின் இடதுகால் அகற்றம்!