கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர் பகுதிகளில் Particularly vulnerable Tribal Group திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு ஒன்றுக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில், புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் பயனாளிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மலைப்பாங்கானப் பகுதியில் (Hill Areas) கோழிக்கமுத்தி-31, கூமாட்டி-22, நாகர்ஊற்று-38 மற்றும் எருமைப்பாறை-9 ஆகிய பகுதிகளில் மொத்தமாக 100 வீடுகள் கட்டப்பட்டு வருவதின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளுடன் நேற்று (டிச.5) ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சர்க்கார்பதி கிராமம், நாகர் ஊற்று 2இல் கட்டப்பட்டு வரும் 11 வீடுகளைப் பார்வையிட்டார். மேலும், நமக்கு நாமே திட்டம் மற்றும் லட்சுமி மெஷின் ஒர்க் இணைந்து ரூ.38 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள ஆனைமலை அரசு உயர்நிலைப்பள்ளிக் கட்டடத்தை பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து ஆட்சித்தலைவர் கூறுகையில், “வேட்டைக்காரன் புதூர் பழங்குடியின மக்களுக்காக Particularly vulnerable Tribal Group திட்டத்தின் மூலம் 150 வீடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களிடம் நேரடியாகப் பேசி, விருப்பத்தை கேட்டறிந்து எந்த மாடலில் வீடு கட்ட முடியும் என்ற கருத்துகளையும் கேட்டறிந்து வீடு கட்டும் பணியினை உடனடியாக தொடங்க அறிவுறுப்பட்டுள்ளது.
நாகர் ஊற்று 1 பகுதியானது செங்குத்தான மலைப்பகுதி என்பதால், அங்கு எந்த மாதிரியான கட்டிட பொருட்கள் வழங்க வேண்டும் மற்றும் புது மாடலில் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உள்ளோம்.
வால்பாறை மக்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க சிஎஸ்ஆர் உதவியுடன் சீட் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் படிப்படியாக முயற்சி செய்து தீர்வு காணப்படும்” என்று கூறினார்.
இதில், சார் ஆட்சியர் (பொறுப்பு) சுரேஷ், ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், லட்சுமி மெஷின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் குமார், துணை அலுவலர் விஜயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பட்டு போல் மிருதுவான கூந்தல் வேண்டுமா?... இதை மட்டும் செய்தால் போதும்!