கோவை உக்கடம் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள சங்கமேஷ்வரர் கோயில் வாசலில் கடந்த 23ஆம் தேதி கார் ஒன்று வெடித்துச்சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த கோவையைச்சேர்ந்த ஜமேசாமுபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
மேலும் கோயில் அருகே கார் வெடித்து சிதறியதை அடுத்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெடித்து சிதறிய காரின் எண்ணை வைத்து தற்போதைய உரிமையாளர் முபின் என்பதைக் கண்டுபிடித்த போலீசார் அவரது வீட்டில் சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் பொட்டாசியம் நைட்ரேட், சிவப்பு பாஸ்பரஸ், நைட்ரோ கிளிசரின், அலுமினியம் தூள், ஆக்ஸிஜன் சிலிண்டர், கந்தகத்தூள் உள்ளிட்ட 75 கிலோ வெடிபொருள் மற்றும் சர்ஜிகல் பிளேட், 9 வோல்ட் பேட்டரி, இரும்பு ஆணி, கேஸ் சிலிண்டர், கையுறை,உட்பட 109 பொருட்கள், மற்றும் இஸ்லாமிய சித்தாந்தம், ஜிகாத் அடங்கிய நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றைப்போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் கார் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அஸாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி, கோவை உக்கடம் காவல் நிலையத்தில் சுந்தரேசன் என்பவர் கொடுத்தப் புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 174 - சந்தேக மரணம் மற்றும் வெடிபொருள் தடுப்புச்சட்டம் 3(ஏ) ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் - திருமண பந்தத்தில் இணைந்தது:அமைச்சர்கள் பங்கேற்பு