கோயம்புத்தூர்: மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் 1,000 -க்கும் மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலமாக நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் அரைநிர்வாணமாக உள்ளே புகுந்து திருடுவதாகவும், மிரட்டுவதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்ததால் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
எனினும் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு குறித்து எழுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாணவிகள் விடுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் உள்ளே புகுந்து வருவதாக நேற்று முன்தினம் எனக்கு தகவல் கிடைத்தது.
விடுதியில் உள்ள ஆண் பணியாளர்கள் வேறுபக்கம் பணியில் அமர்த்த உள்ளனர். முதல் கட்டமாக மாணவிகளின் பாதுகாப்புக்காக பெண் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் தலைமையில் மாணவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஒரு வார காலத்தில் மாணவிகள் விடுதிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பாலியல் தொந்தரவு.. மயில் ரத்தம்.. சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்!