கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, முதல் வரிசை வீரர்களான காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத் துறையினர் மட்டுமே அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் இந்தக் காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது.
ஆனால் பெரும்பாலான இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், வைரஸ் தடுப்பு உடைகள் போன்றவை வழங்கப்படவில்லை என்றும் சில இடங்களில் உணவுகூட முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
உயிரைப் பணயம் வைத்து கரோனா பாதிப்புகள் உள்ள இடங்களில் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் இவர்களுக்காக பல கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆதித் தமிழர் பேரவை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிங்காநல்லூர், லாலி ரோடு போன்ற இடங்களில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.
கைகளில் பதாகைகளை ஏந்தியும், முகக்கவசங்கள் அணிந்தும் இவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து முறையான பாதுகாப்பு உபகரணங்களை அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்க சென்ற 11 பேருக்கு கரோனா!