கோவை 100 அடி சாலையில் பல ஆண்டுகளாக தனியார் சிட் பண்ட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பயனாளிகள் பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஒவ்வொரு பயனாளியும் கட்டிய பணத்தில் பாதியை மட்டுமே கணக்காக பதிவு செய்து மீதி பணத்தை மோசடி செய்ததாக நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பி தரக்கோரி பல மாதங்களாகப் பயனாளிகள் கேட்டு வந்தனர். எனினும், பணத்தை திருப்பி தருவதாக தொடர்ந்து கூறி வந்த சிட் பண்ட் நிறுவனம், இதுவரை யாருக்கும் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இதுகுறித்து, கோவை பி3 காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சிட் பண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ் பாபுவை இதுவரை காவல்துறை முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுவரை, பயனாளிகள் அனைவரிடமிருந்தும் மேற்கண்ட சிட் பண்ட் நிறுவனம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து, பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்த நிறுவனத்தால் ஆத்திரமடைந்த பயனாளிகள், கோவை 100 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்திபுரம் காவல்துறையினர் பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பயனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும், பணத்தை திருப்பி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், பயனாளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.