கோவை பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் புதூர் பகுதியில் துப்புரவுப் பணியாளர்களின் ஏழு வயது மகள் மார்ச் 25ஆம் தேதி காமுகர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் 14 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறுமியின் வீட்டின் அருகேயிருந்த சந்தோஷ் என்பவர் சம்பவம் நடந்த தினத்திலிருந்து தலைமறைவானதாக தெரிகிறது.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து, இன்று காலை சந்தோஷை கைது செய்த காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நமக்கு கிடைத்த தகவலின்படி:
- தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சந்தோஷ் கோவை தொண்டாமுத்தூர் உலியாம்பாளையம் பகுதியில் தனியாக வசித்துவந்தார்.
- அவ்வப்போது கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூரில் உள்ளதனது பாட்டி வீட்டிற்கு சந்தோஷ் வருவது வழக்கம்.
- அப்போது, சிறுமியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்ததாக தெரிகிறது.
- இதையடுத்து, சம்பவத்தன்று தனது காம சொரூபத்தை வெளிப்படுத்தி அப்பாவி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளார்.
- இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்த முழு விவரங்கள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் எனதனிப்படை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.