கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானை வலசைப் பாதையில் முக்கியமான இடமாகும். கல்லார் வழித்தடம் ஆண்டுதோறும் யானைகள் பயணிக்கும் பகுதியாகும். கேரள வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் ஆனைக்கட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை வழியாக கல்லாறு அடைந்து அங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புப் பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாகச் சென்று, அங்கிருந்து நீலகிரி மற்றும் கர்நாடகா, கேரளா வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கல்லாறு யானைகள் வழித்தடத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் யானைகள் வழி மாறி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் சுற்றி வரும் ஆண் யானை ஒன்றுக்கு, அப்பகுதி மக்கள் பாகுபலி என்று பெயர் சூட்டி அழைத்து வருகின்றனர்.
பாகுபலி யானை நாள்தோறும் மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது. இந்த யானை மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையைக் கடந்து விவசாயத் தோட்டங்களில் புகுந்து வருகிறது. இந்த யானை செல்லக்கூடிய வழிகளில் ஆங்காங்கே தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் யானை அந்தப் பகுதி வழியாக செல்ல முடியாமல் மாற்றுப் பாதையை பயன்படுத்தி வருகிறது.
இதே போன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனத்தில் இருந்து வெளியேறிய பாகுபலி உள்ளிட்ட இரு யானைகள் ஊட்டி சாலையைக் கடந்து தனியார் உணவக வளாகத்திற்குள் புகுந்தது. இதனை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வேறு பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில் மீண்டும் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த பாகுபலி யானை ஊட்டி சாலையில் உள்ள பிரபல தனியார் உணவகங்கள் முன்பு சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அந்த யானை வழக்கமாக வரும் வழியில் கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்ததால் அதனை உடைத்து விட்டு சாலையில் கடந்து சென்றது. இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்த யானை குறிப்பிட்ட பாதை வழியாக செல்வதற்குத் தடைகள் இருந்ததால் சாலையிலேயே சற்று தூரம் நடந்து சென்று பின்னர் தனியார் தோட்டம் வழியாக சென்றது. இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், ’தொடர்ந்து இந்த யானை நாள்தோறும் மாலை நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி இரவு முழுவதும் விவசாய பயிர்களை உண்பதோடு அதனை சேதம் செய்கிறது. இந்த யானை வனப்பகுதிக்குள் செல்ல மறுப்பதால் இதனை கண்காணிக்க ரேடியோ காலர் கருவி பொருத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே விவசாயப் பயிர்களை பாதுகாக்க முடியும்.
மேலும் வனத்திலிருந்து வெளியேறும் இந்த யானை சர்வ சாதாரணமாக மின் வேலிகளையும் தடுப்பு சுவர்களையும் உடைத்துக் கொண்டு செல்வதால் யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Vijay:12 மணி நேரத்துக்கும் மேலாக நின்று பரிசளித்த விஜய்... வாரிசு ஸ்டைலில் விடைபெற்றார்!