கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி உள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் 'பாகுபலி' என மக்களால் செல்லமாக அழைக்கப்படும், ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த யானை மாலை வேளைகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சமயபுரம் பகுதியில் சாலையைக் கடந்து அருகிலுள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் நுழைந்து, பயிர்களைச் சேதம் செய்து வருகிறது.
பகல் முழுவதும் வனத்திற்குள் ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் சுற்றி, தனது பசியினை தீர்த்துக்கொள்ளும் பாகுபலி யானை அதிகாலையில் சமயபுரம் வழியாக நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.
நீண்ட தந்தங்களுடனும், பிரம்மிப்பூட்டும் அதன் பிரமாண்ட உருவமும் கொண்ட பாகுபலி யானையைக் கண்டு சமயபுரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் யானை தாக்கி இளைஞர் பலி: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
ஆனால், இதுவரை இந்த பாகுபலி யானை மனிதர்கள் யாரையும் தாக்கவோ, துரத்தவோ, விரட்டவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குணம் கொண்ட பாகுபலி யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கும் புகும்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. அப்படி செல்வதால் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இதனை பிடித்து சிகிச்சை அளித்து, அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என சூழலில் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மற்றொரு ஆண் யானையுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானையின் வாயில் ரத்தக் காயங்கள் இருந்ததை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் குழுவில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் யானைகள் பிளிரும் சத்தம் கேட்டது. பின்னர் வனப்பகுதியில் இருந்து பாகுபலி மற்றும் அதனுடன் மற்றொரு ஆண் யானை வெளியேறியது. இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருவதாகவும், மேலும், அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்ததால் யானையின் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அதனை உடனடியாக மயக்க ஊசி செலுத்திப் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கொடூரமான வழக்குகளில் சாட்சியங்களின் வீடியோ, ஆடியோ பதிவு - அஸ்ரா கார்க்கிற்கு உயர் நீதிமன்றம் பாராட்டு