கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏழை எளிய 123 இணையருக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்திருந்தார்.
அதன்படி கோவை-சிறுவாணி சாலையில் பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு 123 சர்வ சமய இணையருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய இணையருக்கு அவரவர் மத வழிமுறைப்படி திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட 73 வகையான சீர்வரிசைப் பொருள்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன், அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது கோவை மண். கரோனா காலத்தில் வெளியே வராத திமுக தலைவர் ஸ்டாலின், 4.5 கோடி ரூபாய்க்கு விக் வைத்து தற்போது தேர்தல் நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பயிர்க்கடன்களை ரத்துசெய்து விவசாயிகளின் கோரிக்கையினை இந்த அரசு நிறைவேற்றி இருக்கின்றது. இதுபோன்று பல திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துவருகிறார். அவரை மக்கள் வாழும் காமராஜர் எனச் சொல்கின்றனர். ஆனால், ஸ்டாலின் சொல்வதை முதலமைச்சர் செய்கின்றாராம். ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா? முதலமைச்சர் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்.
கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் பதவி வழங்கப்படாத ஸ்டாலின், அவரது மறைவிற்குப் பிறகு பின்கதவு வழியாக வந்து தலைவர் பதவியைப் பிடித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் அவர் எந்த வேலையையும் செய்யவில்லை. ஆனால் தற்போது சினிமா வசனங்களைப் பேசிவருகிறார்.
ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றுகுவிக்க காரணமாகவும், 50 ஆயிரம் பெண்களை வன்கொடுமை செய்ய காரணமாகவும் இருந்தவர்கள் திமுகவினர். ஸ்டாலினால் எப்போதும் முதலமைச்சராக முடியாது. எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராவார். அதற்குத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதுணையாக இருப்பார்" என்றார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. அதிமுக வரலாற்றில் எடுத்துக்காட்டு மண்டலமாக கொங்கு மண்டலம் இருக்கின்றது. ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறழாமல் அப்படியே நடைமுறைப்படுத்தும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசுக்கு நிதி செல்கின்றது. காங்கிரஸ் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் திமுக பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், தற்போதைய அதிமுக அரசு 11 மருத்துவக்கல்லூரிகளை அதிமுக அரசு பெற்றுக்கொடுத்துள்ளது. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி இன்று திருமணம் செய்துகொண்ட மணமக்கள் இருக்க வேண்டும்" என அறுவுறுத்தினார்.
பின்னர் விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
அதிமுகவில் மட்டும்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும். அதிமுக ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்தத் திருமண மேடையே சாட்சி. திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஆறாயிரத்து 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு வழங்கி இருக்கின்றது.
திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றோம்.
அவினாசி-அத்திக்கடவு திட்ட இரண்டாம்கட்ட விரிவாக்கப் பணி விரைவில் தொடங்க இருக்கின்றோம். தமிழ்நாடு தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில்முனைவோர் தொழில் ஆர்வமாக தமிழ்நாடு வருகின்றனர்.
இந்தியாவில் அதிக விருதுபெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கின்றது. பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரமாக கோவை, சென்னை இருக்கின்றன" என்றார்.