கோவை: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்(30) என்பவருக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி(27) என்பவருக்கும் துபாய் சென்றபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் நட்பு காதலாக மாறி, திருமணம் செய்துகொள்ளாமலே இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். பின்னர் நாடு திரும்பிய நிலையில் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக இவர்கள் பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தனர்.
சமீபத்தில் ராகேஷ் கேரளாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று (டிச. 3) திரும்பியுள்ளார். அப்போது ராகேஷ் தான் திருமணம் செய்து விட்டதாகக் கூறி ஜெயந்தியின் செல்போனிலுள்ள ஆதாரங்களை அழிக்க முற்பட்டுள்ளார்.
ஏற்கனவே காதலன் மீது சந்தேகத்திலிருந்த ஜெயந்தி தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை (திராவகத்தை) எடுத்து ராகேஷ் மீது ஊற்றியுள்ளார். இதில் ராகேஷ் நிலைகுலைந்து போக ஜெயந்தி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் பீளமேடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஜெயந்தி மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 323, 324, 326(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகேஷ் மீது 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நல்லம நாயுடு வீட்டில் ஏழு சவரன் தங்க நகை திருட்டு