கோயம்புத்தூர்: பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானை, வனத்துறையினரால் புதிதாகப் பிடிக்கப்படும் காட்டு யானைகளை இட மாற்றம் செய்ய லாரியில் யானையுடன் ஆபத்தான பயணத்தை ஆர்வத்துடன் செய்து வருகிறார், கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் ஆறுச்சாமி (52). கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறையில் வசித்து வரும் ஆறுச்சாமிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்குத் திருமணமான நிலையில் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார், ஆறுச்சாமி.
இவர் சிறு வயது முதல் வாகனங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் லாரி ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு மற்றும் கனரக வாகங்களை ஓட்டி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறையில் யானைகளை ஏற்றிச் செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10 டன் எடை கொண்ட லாரிக்கு ஓட்டுநர் தேவை என்பதை நண்பர்கள் மூலம் அறிந்த ஆறுச்சாமி, கடந்த 2011ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வனத்துறையில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கும்கி யானைகள் இடம் பெயர்வு, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து தொல்லை கொடுக்கும் காட்டு யானைகளைப் பிடிக்கும் 30-க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களில் ஓட்டுநராக தனது பணியை திறம்பட செய்து வந்துள்ளார் என்பது பெருமையான காரியமாகும்.
இதுகுறித்து ஓட்டுநர் ஆறுச்சாமி கூறுகையில், "வனத்துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். யானை ஆப்ரேஷன்களில் ஆபத்து சவால்களை சந்தித்து இருக்கிறேன். மாங்கரை அருகே சின்னத்தம்பி யானையை பிடித்து லாரியில் ஏற்றி அழைத்துச் செல்லும் போது தந்தத்தால் குத்தி, ஓட்டுநர் அறையை சேதப்படுத்தியது. அதேபோல ''சீனிவாசா'' என்ற யானையை பிடித்து லாரியில் ஏற்றிய, சில நிமிடங்களில் துதிக்கையால் என் கையை பிடித்து, தாக்க முயன்றது. அப்போது லாரியில் இருந்து குதித்து உயிர்ப் பிழைத்தேன் என்றார்.
மேலும் மற்ற வாகனங்களை இயக்குவதைப் போல இந்த லாரியை இயக்க முடியாது. யானையின் அசைவுக்கு ஏற்ப லாரியை இயக்கினால் மட்டுமே பத்திரமாக இலக்கை அடைய முடியும். அப்படி இருந்தும் ''விநாயகா'' என்ற யானையினைப் பிடித்து முதுமலை கொண்டு செல்லும்போது முரண்டு பிடித்து லாரியை மரத்தில் சாய்த்தது. ஆபத்துகள் அதிகம் உள்ள இந்தப் பணியை தனது குடும்பத்தினர் விரும்பவில்லை, இருந்தாலும் யானைகள் மீது கொண்ட காதலாலும் பணி நிரந்தரமாக்கப்படும் என்ற நம்பிக்கையாலும் தான், நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்" எனத் தெரிவித்தார், யானைகளின் ஓட்டுநர் ஆறுச்சாமி.