கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியில் எல்.எஸ்.கன்ஸ்டிரக்சன் அஃபோர்டு டூரிஸ்ட் அன்டு டிராவல்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இந்நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “செய்தித்தாள்களில் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து, அந்நிறுவனத்தில் தொடர்பு கொண்டோம். சிங்கப்பூரில் பல்வேறு இன்ஜினியரிங், வாகன ஓட்டுநர், அட்மின் போன்ற வேலைகளை வாங்கி தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும், விமான பயணச் சீட்டுகளையும் வழங்கினர். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி வாகனம் வந்து பிக்கப் செய்து கொண்டு, சென்னை சென்று கரோனா பரிசோதனை செய்த பின் சிங்கப்பூர் அழைத்துச் செல்வோம் என கூறினர். ஆனால் 8 ஆம் தேதி மதியம் வரை வாகனம் எதுவும் எங்களை பிக்கப் செய்ய வரவில்லை.
அந்நிறுவனத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டபொழுதும் லைன் கிடைக்காமல் இருந்தது. சிலர் நேரடியாக அங்கு சென்று பார்த்தபோது, அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இதன் பின்பு தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து, மூன்று கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது.
இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தனர்.
இதேபோல் படித்த இளைஞர்களை குறிவைத்து பண மோசடியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாகவும், அனைவரும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை சார்பிலும், கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பிலும் பலமுறை வலியுறுத்தப்பட்ட போதிலும், இது போன்று மோசடிகள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது.
இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு டெபாசிட்தாரர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை அணுகலாம் என அறிவிப்பு