கோயம்புத்தூர்: அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஸ்வரன், வான்மதி தம்பதியினர். விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள்ளார்.
அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது.
இதையடுத்து, விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்க அன்னூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வேலாயுதத்தை போனில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆ.ராசாவுக்கு மிரட்டல்...! கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது