கோயம்புத்தூர்: சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளரிடம் வாய் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
இதனிடையே கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான வார்தைகளால் பேசி தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் (ஜன.04) இரவு பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் பாஜக மண்டல பொறுப்பாளர் முகுந்தன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். மேலும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து போத்தனூர் காவல் துறையினர் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!