கோயம்புத்தூர்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான உமேஷ் கோபிநாத் யாதவ், பெங்களூருவில் இசைப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த எண்ணிய கோபிநாத் யாதவ், தனது காரின் பின்புறத்தில் மாருதி கார் ஒன்றை இணைத்துள்ளார்.
இந்த வாகனத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நாடு முழுவதும் பயணித்து போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார். மேலும் வீரர்கள் பயன்படுத்திய பொருள்களையும் சேகரித்துவருகிறார்.
மேலும் ராணுவ வீரர்களின் சமாதியிலிருந்து மண்ணைச் சேகரித்துவரும் கோபிநாத் யாதவ், அதனைக் கொண்டு இந்திய வரைபடம் ஒன்றையும் உருவாக்கிவருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் 1.15 லட்சம் கி.மீ. பயணம் செய்து, சுமார் 140 உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்த உமேஷ் கோபிநாத், நேற்று (பிப்ரவரி 11) கோயம்புத்தூர் வந்தடைந்தார்.
கருமத்தம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு வந்த அவருக்கு மாணவர்கள், பேராசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், சமாதியிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய உமேஷ் கோபிநாத், “நான் ராணுவ குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும், நாட்டின் உண்மையான வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ராணுவ வீரர்களின் சமாதியில் சேகரிக்கப்பட்ட மண்ணைக் கொண்டு டெல்லியில் இந்திய வரைபடத்தை உருவாக்கிவருகிறேன்.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குப் பயணித்து உயிரிழந்த ராணுவ வீரர்கள் பயன்படுத்திய பொருள்கள், அவர்களது சமாதியில் மண்ணையும் சேகரித்துவருகிறேன். பிப்ரவரி 14ஆம் தேதியுடன் எனது பயணத்தை நிறைவு செய்யவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், நான் பயணம் செய்யும் இடங்களில் உணவு, டீசல் போன்ற தேவைகளுக்கு பொதுமக்கள் பலர் உதவியதாக உமேஷ் கோபிநாத் யாதவ் பெருமையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிபின் ராவத் உயிரிழப்பு: மருத்துவ பல்நோக்கு மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்