கோவை: சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி கிராம பஞ்சாயத்தில் அருகருகே உள்ள தோட்டங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்தன. வதம்பச்சேரி காந்தி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 17 மயில்களும், ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய காலி இடத்தில் 12 மயில்களும், கோபால்சாமி என்பவருக்கு என்பவருக்கு சொந்தமான இடத்தில் 2 மயில்களும், கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 2 மயில்கள் என மொத்தம் 33 மயில்கள் இறந்து கிடந்தது.
இது குறித்த தகவலறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனச்சரகர் சந்தியா தலைமையில் வந்த வனத்துறையினர் மயில்கள் இறந்து கிடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் இறந்து போன 33 மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக மதுக்கரைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த மயில்களின் இரைப்பையில் சோளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சோளத்துடன் ரசாயன கலவையும் இருந்ததால் இந்த மயில்களின் உயிரிழப்புக்கு விஷத்தன்மை கொண்ட சோளமே காரணம் என தெரியவந்தது.
மேலும் இது குறித்த உறுதி தன்மையை அறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ”சுல்தான்பேட்டை பகுதியில் மயில்கள் உயிரிழந்த இடத்தில் புதிதாக சோளம் விதைக்கப்பட்டுள்ளது. அது தவிர விவசாய நிலத்தின் மேல் பரப்பில் சோளம் தூவப்பட்டுள்ளதால் அதனை உட்கொண்ட மயில்கள் உயிரிழந்திருக்கலாம்.
மேலும் அந்த சோளத்தின் மாதிரிகளும் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் விஷத்தை உட்கொண்டதால் மயில்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விஷத்தின் தன்மையை அறிய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவில் மயில் இறந்ததற்கான முழு காரணம் தெரிய வரும். இது தொடர்பாக விவசாயிகள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக” தெரிவித்தனர்.
இதனிடையே கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட மக்காச்சோள விதைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த வனத்துறையினர் சேகரித்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: வால்பாறை அருகே கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி பலி; சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த சோகம்!