சென்னை: ராயப்பேட்டையில் சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் சென்னை மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
தலைவர்கள் பற்றி அவதூறு
அதில், "கடந்த 11ஆம் தேதி யூ-ட்யூபில் 'ழகரம்' வாய்ஸ் என்ற சேனலைப் பார்த்தபோது, அதில் பெரியாரையும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவுப்படுத்தி, கீழ்த்தரமாகப் பேசிய காணொலியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
மேலும் பெரியார் பாலியல் தொழில் செய்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த நபர், 'முடிந்தால் என் மீது வழக்குத் தொடுத்துப் பார்' என மிரட்டல் விடும் தொனியில் பேசியிருப்பது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பதுபோல் உள்ளது. இவ்வாறு பெரியார் குறித்தும் அவரது தொண்டர்கள் குறித்தும் தொடர்ந்து பொய் கருத்துகளைப் பதிவிட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுவரும் சீதையின் மைந்தன் என்கின்ற தட்சிணாமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.
மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு
இந்தப் புகாரின் பேரில் ராயப்பேட்டை காவலர்கள் பேச்சு மூலமாக சாதி சம்பந்தமான விரோத உணர்ச்சிகள் தூண்ட முயற்சித்தல், வேண்டுமென்றே அவமதித்தல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் காணொலி வெளியிட்ட குன்றத்தூரைச் சேர்ந்த யூ-ட்யூபர் தட்சிணாமூர்த்தியை காவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தட்சிணமூர்த்தி இதேபோல் மூன்று யூ-ட்யூப் சேனலை நடத்திவந்ததும், கச்சத்தீவு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருவது தெரியவந்தது. இதனையடுத்து தட்சிணமூர்த்தி பெரியார் குறித்து பேசிய காணொலியை சைபர் கிரைம் காவல் துறையினர் சேனலிலிருந்து நீக்கினர். இவரிடம் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றது.
இதையும் படிங்க: வெள்ளித்திரையிலும், உலகக் கோப்பையை ரசிக்கலாம்... எப்படி தெரியுமா?