சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் இளைஞர் ஒருவர் அலையில் சிக்கி உயிருக்குப் போராடி வந்தார். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நீரில் தத்தளித்து வந்த இளைஞரை உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடல் அலையில் சிக்கிக்கொண்ட இளைஞர் மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் வடமாநில இளைஞர் தினேஷ் குமார் (27) என்பதும், அவர் நாட்டு மருந்துக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
தினேஷ் குமார் நாட்டு மருந்து கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, கலங்கரை விளக்கம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடற்கரைக்குச் சென்று சிறுநீர் கழிக்க சென்றதாகவும், அப்போது தினேஷ் குமார் கடல் அலையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மெரினா போலீசார், தினேஷ் குமார் சிறுநீர் கழிக்க சென்றாரா அல்லது தற்கொலை செய்து கொள்ள சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.