சென்னை: சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றிய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சுமார் 11 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சதாம் உசேன் அந்த பெண்ணிடம் தான் கடனில் சிக்கி உள்ளதாகவும் அடிக்கடி பணம் தேவைப்படுவதாக கூறி சிறுக சிறுக அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. காதலன் கடன் தொல்லையில் சிக்கியிருப்பதால் இளம் பெண் லோன் போட்டு பணம் வாங்கி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென சதாம் உசேன் அந்த பென்னிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இது குறித்து இளம்பெண் சதாம் உசேனிடம் கேட்ட பொழுது தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் தன் கடன் பிரச்சனை அதிகமாக உள்ளதால் என்னை தொந்தரவு செய்யாதே என கூறி அந்த இளம் பெண்ணின் தொலைபேசி எண்ணை சதாம் உசேன் பிளாக் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சதாம் உசேன் என்கிற நபர் சுமார் 8 லட்ச ரூபாய் வரை தன்னிடமிருந்து பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தததா பல்லடம் 4 பேர் படுகொலை விவகாரம்? - போலீசார் பாதுகாப்புடன் உடல்கள் நல்லடக்கம்!
இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளம் பெண், "தன்னை திருமணம் செய்து கொள்வதாக சுமார் 8 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு சதாம் உசேன் ஏமாற்றி விட்டதாகவும் கொடுத்த பணத்திற்கு தான் மாதம், மாதம் தவணைகள் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
தன்னிடம் பேசுவதை நிறுத்திக்கொண்ட சதாம் உசனிடம் கேட்ட பொழுது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், தன்னை தொந்தரவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், சதாம் உசேன் தன்னைப் போன்ற பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் தனக்கு தகவல்கள் வந்துள்ளதாக இளம் பெண் கூறினார்.
எனவே உடனடியாக சதாம் உசேனை கைது செய்து தனது பணத்தினை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்து உள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹரியானாவில் கூட்டு பாலியல் வன்புணர்வு - கணவர், காவலர் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு!