கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு (25). இவர் அந்தப் பகுதியில் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆமணக்கந்தோண்டி பொன்னேரி கரையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதற்காக நின்றுள்ளனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் பிரபு மற்றும் அவர்களின் கூட்டாளிகளையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்குப் பாதகமான முயற்சிகளில் ஈடுபடுவார் என்பதால், அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் காமராஜன் கோரிக்கை விடுத்தார்.
இதனடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லாவின் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக் காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இன்று 09.01.2024ஆம் தேதி மேற்படி பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: துணை வேந்தர் நியமனத்திற்கான அறிவிப்புகளை திரும்ப பெற்ற ஆளுநர் மாளிகை.. திடீர் மனமாற்றம் ஏன்?