சென்னை செம்பியம் பட்டேல் சாலைப் பகுதியில் குடிபோதையில் இளைஞர் ஒருவர், அந்தத் தெருவில் உள்ள ஒரு வீட்டைத் தட்டி ராஜேஷ் உள்ளாரா என விசாரித்து தொந்தரவு செய்துள்ளார்.
பின்னர் அந்த நபரை பொதுமக்கள் திட்டி விரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த நபர் கையில் துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் உடனே அருகிலிருந்த பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து செம்பியம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து, காவலரிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று துப்பாக்கியை கைப்பற்றி அந்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது. இவர் திருமணமாகி மனைவியுடன் பிரிந்து வாழ்வதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இவரது நண்பர் ராஜேஷ் என்பவர் பட்டேல் சாலையில் குடியிருந்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்குமுன் அவர் வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார். காலி செய்த விஷயம் செந்தில் குமாருக்கு தெரியாததால் குடிபோதையில் அவர் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் இவர் துப்பாக்கி வடிவிலான சிகரெட் பற்றவைக்கும் லைட்டரை காட்டி மிரட்டியது தெரிய வந்தது. இந்த லைட்டரை பாண்டிச்சேரியில் உள்ள அவரது நண்பர் சிவாவிடம் இருந்து பெற்று வந்து பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று லைட்டர் ஆன்லைனில் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதும் விசாரணையில் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.